Select Menu

Slider

Powered by Blogger.

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

அண்ணன், தம்பி கதையை பாசமலர்களாக ரசிகர்களுக்கு சூட்டியிருப்பதே வீரம்.
மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜித். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.

இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார்.

இதனால், அஜித் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அஜித்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார்.

இந்நிலையில், அஜித்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார்.

தனது அண்ணன் அஜித்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அவர் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள்.

அதற்கு அஜித்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர், அஜித் சிறு வயதில் காதல் செய்ததாகவும், தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும், மேலும் அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

என்றாலும், அஜித்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜித்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார்.

இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அண்ணனை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர்.

இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும், அஜித்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜித்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜித்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜித் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார்.

அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜித்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அவர் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார்.

அதுவரை சாதுவாக இருந்த அஜித், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

இறுதியில் அஜித்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார்.

மருத்துவமனையில் நினைவு திரும்பும் தமன்னா அஜித்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜித் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா? பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

அஜித் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார்.

ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜித்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார்.

இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது.

குறிப்பாக ‘என்ன நான் சொல்றது’, ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்’ என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார்.

தமன்னாவுக்கும், அஜித்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தானம் முதல் பாதிவரை கொமடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார்.

இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜித்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜித்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

மொத்தத்தில் ‘வீரம்’பாசத்துடன் கூடிய மாவீரம்.

நடிகர்: அஜீத்

நடிகை: தமன்னா

இயக்குனர்: சிவா

இசை: தேவிஸ்ரீபிரசாத்

ஓளிப்பதிவு: வெற்றி

தயாரிப்பு:பாரதி ரெட்டி


சிவனும், சக்தியும் மோதினால் என்னனென்ன பிரளயங்கள் நடக்கும் என்பதையே சொல்லியிருக்கிறார் இயக்குனர் நேசன்.
இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வெளியான ஜில்லா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளதா?

மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மோகன்லால், இந்நிலையில் தனக்காக அடியாள் ஒருவன் உயிரைவிட, அவனின் பிள்ளையான விஜய்யை தத்தெடுத்து சொந்தப் பையன்போல் வளர்க்கிறார்.

விஜய்யோடு பக்கபலத்துல அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்துனு என்று இருவரும் ஜில்லாவையே கலக்கிவருகிறார்கள்.

தன் அப்பாவைக் கொன்றது ஒரு பொலிஸ் என்பதால், பொலிசைக் கண்டால் ‘காக்கி’யை கழட்டி ஓடவிட்டு விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வலம் வருகிறார் விஜய்.

ஆனால், பொலிஸ் என்பது தெரியாமலேயே அந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டரான காஜலிடம் மனதைப் பறிகொடுக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, திடீரென ஒரு நல்ல பொலிஸ் மதுரைக்குள் நுழைய, செய்வதறியாது நிலைகுலைகிறார் மோகன்லால். தனக்கு கீழே எல்லாம் இருக்கணும்னா, தன்னோட ஒரு ஆள் பொலிஸ் டிபார்ட்மென்டுக்குள்ள இருக்கணும்னு முடிவு பண்ணி, விஜய்யை பொலிசாக்குகிறார்.

தனக்குப் பிடிக்கவே பிடிக்காத பொலிஸ் உடையை அணிந்ததும் மனம் திருந்தும் சக்தி, ஒரு கட்டத்தில் சிவனையே எதிர்க்கத் தொடங்குகிறார். சிவனும், சக்தியும் எதிரும் புதிருமாக நிற்க, ‘ஜெயிச்சது யாரு’ங்கிறதுதான் க்ளைமேக்ஸ்.

விஜய் என்ற ஒரு ‘மாஸ்’ ஹீரோ, மோகன்லால் என்ற ஒரு ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, எப்படிப்பட்ட திரைப்படத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம்?.

ஆனால், ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைக்கு, நீளமான திரைக்கதை ஒன்றை அமைத்து ‘வளவள’வென நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர்!

வழக்கம்போல் அதே துறு துறு விஜய். கொஞ்சம் ‘போக்கிரி’ ஸ்டைல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியோடு சக்தியாக தனது ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

‘இளையதளபதி’யின் டான்ஸ், ஃபைட் பற்றி சொல்லவே வேண்டாம். இதிலும் அடித்துத் தூள் பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும், என்னமோ மிஸ்ஸிங்.

கமலுக்கு எதிராக நின்று ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை படம் முழுக்க ‘நான் சிவன்டா...’, ‘நான் சிவன்டா...’ன்னு இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனம் பேசவிட்டிருப்பது கொஞ்சம் இடிக்கிறது.

கேரள ரசிகர்கள் மோகன் லாலை இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அந்த ‘சிவன்’ கதாபாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறொவரை யோசிக்க முடியவில்லை. வீணடிக்கப்பட்ட தனது பாத்திரத்தையும், தன் நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்!

ஹீரோயின் காஜல் அகர்வாலுக்கு லைஃப் டைம் கதாபாத்திரம். மூணு பாடல்களில் விஜய்யுடன் ஆட அற்புதமான வாய்ப்பு அவருக்கு, அவருக்கு கொடுத்துள்ள பகுதியை செவ்வனே செய்திருக்கிறார்.

சூரி, கிடைத்த கேப்பில் கொமடி செய்திருக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், மகத், நிவேதா தாமஸ், ஆர்.கே., பிரதீப் ராவத், ரவி மரியா என ஆளாளுக்கு படம் நெடுக வந்து போகிறார்கள்.

பாடல்களை கேட்க முடிந்தளவுக்கு படத்தில் ரசிக்க முடியவில்லை. ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் மட்டுமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குளிர்ச்சி. ‘மாமா... எப்போ ட்ரீட்’ பாடலில் நடன அமைப்பு கவர்ந்திருக்கிறது.

படம் முழுக்க ‘ஜில்லா’ தீம் மியூசிக்கை ஓடவிட்டே பின்னணியை ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, ஆனால் எடிட்டிங்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள்.

படத்தில் பல நீளமான காட்சிகளையும், தேவையில்லாத காட்சிகளையும் கொஞ்சம் வெட்டி, சுருக்கியிருந்தால் படம் இன்னும் ‘சுறுசுறு’ப்பு பெற்றிருக்கும்.

பெரிய ‘ஸ்டார் வேல்யூ’ இருந்தும் ,சுவாரஸ்யமில்லாத முதல் பாதி, எதிர்பார்த்த காட்சிகளோடு நகரும் இரண்டாம் பாதி, பொறுமையை சோதிக்கும் 3 மணி நேர திரைக்கதை என நிறைய தடுமாற்றங்கள் ‘ஜில்லா’வில்!

விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் சர்க்கரை பொங்கலாக இருக்கலாம். ஆனால் பொதுவான ரசிகனைப் பொறுத்தவரை இப்படம் வெண்பாங்கல்.

நடிகர்கள் - விஜய், மோகன்லால்

நடிகைகள் - காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ்

இசை - டி.இமான்

இயக்கம் - ஆர்.டி.நேசன்

தயாரிப்பு - ஆர்.பி.சௌத்ரி
ஆங்கிலேயர்களின் அதிகாரம் நடந்த காலத்தில், பெண்களை சாதிக்கு அடிமையாக்கி வைத்திருந்த  கதை. வெளியில் ஆசை நாயகி வைத்திருக்கும் மணிசாமி அய்யர், வீட்டில் ஆச்சாரங்களை கெட்டியாகக் கடைபிடிப்பவர். சாதி வழக்கப்படி தன் தங்கை மகள் துளசிக்கு 8 வயதில் திருமணம் செய்து வைக்கிறார். திருமணமான மறுநாளே 14 வயது மாப்பிள்ளை இறந்து போக, விதவையாகிறாள் துளசி. அவளை வீட்டின் இரண்டாங்கட்டில் தள்ளிவிடுகிறார்கள். வசந்தத்தை நுகரவேண்டிய வயதில் வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சாதி சிறையில் அடைக்கப்படுகிறாள். கதர் ஆடையும், கலைந்த கனவுகளுமாக கரைகிறது அவளது இளமை.பருவ பெண்ணாக மாறிய பிறகு ஜோதிடர் ஆலோசனைப்படி துளசியின் தலையை மொட்டையடிக்க முடிவு செய்கிறார் மணி அய்யர். 

முற்போக்கு சிந்தனையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மணிசாமி அய்யரின் மகன் கண்ணன், இந்த சாதி கொடுமைக்கு எதிராகவும் தந்தைக்கு எதிராகவும் நிற்கிறார். துளசிக்கு இழைக்கப்படும் அநீதியை சகிக்க முடியாமல் அவளது பாட்டி அம்மணியம்மாவும், கண்ணனும் ஆளுக்கொரு அதிரடி முடிவெடுக்கிறார்கள். அது என்ன? அதன் விளைவென்ன என்பது மீதிக் கதை.எளிமையான, வலிமையான சினிமா. கடந்த நூற்றாண்டின் கருப்பு பக்கத்தை பளிச்சென்று காட்டும் காலக் கண்ணாடியாக வந்திருக்கிறது. சாதி வெறிபிடித்த, தனிமனித ஒழுக்கம் இல்லாத மணிசாமி அய்யர் கேரக்டராகவே மாறி இருக்கிறார் இயக்குனர் மோகன் சர்மா. வார்த்தையிலும், செயலிலும் ஜாதி உணர்வையும், பணத் திமிரையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது மனைவியாக பிரியாவும், தங்கையாக ரேணுகாவும் அக்ரகாரத்து அப்பாவி பெண்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். தனக்கு நடக்கும் திருமணத்தை வேடிக்கையாக அனுபவிப்பதும், அலங்காரம் களைந்து மூலையில் உட்கார வைக்கப்படும்போது புரியாமல் தவிக்கும்போதும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சிறுமி பேபி சம்ஜா.வளர்ந்த துளசியாக சம்விருதா. சாதி கட்டுப்பாட்டுக்கு பயந்து அவர் படும் அவஸ்தை மனதை பிழிகிறது. 

பக்கத்து வீட்டில் நடக்கும் பாட்டு வகுப்பை, சுவருக்கு இந்தப் பக்கம் இருந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம், பாட்டி மீது கொண்டிருக்கும் தீராத பாசம் என சோகம் சுமந்த கன்னியாக கண்கள் பணிக்க வைக்கிறார்.அன்பு பாசம் தவிர வேறெதையும் அறியாத மனுஷியாக சுகுமாரி. முப்பது வருட விதவை வாழ்க்கை வாழ்ந்து வலி அறிந்தவள். தன் பேத்திக்கும் தன் நிலை வந்ததை எண்ணி தவிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்சம். ஜாதி கட்டுக்களை உடைக்க அவர் எடுக்கும் அந்த நெருப்பு முடிவு வரை, அவர் நடிப்பை பார்க்கும்போது நிஜத்தில் அவரை இழந்த வலியும் சேர்ந்து கொள்கிறது.

பேனாவில் மை தீர்ந்த மாஸ்டர் நெடுமுடி வேணுவும், அவரை கேள்வி கேட்கும் அந்த பைத்தியக்காரி கேரக்டரும் அருமையான படைப்பு. 1947க்கு முந்தைய காலகட்டத்தை திரைக்குள் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறார்கள். மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவும், சுந்தரத்தின் இசையும் இணைந்து கதை சொல்லியிருக்கிறது. இரண்டு தேசிய விருதைகளை வென்ற படம். அதற்கு தகுதியானது என்று உணர வைக்கிறது..

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர், ஜெ.சி.டேனியல். சினிமா ஆர்வத்தால், மும்பையில் பால்கேவையும், சென்னையில் நடராஜ முதலியாரையும் சந்தித்து, படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பிறகு சொத்துகளை விற்று, கேமரா வாங்கி, ஒரு ஸ்டுடியோவை நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்தினார்.

புராண, இதிகாச சம்பவங்களே படங்களாக உருவாக்கப்பட்ட அந்த காலத்தில், சமூக கதையைப் படமாக்க முயன்றார். விகதகுமாரன் என்ற முதல் மலையாள மவுனப் படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தார். தாழ்த்தப்பட்ட பெண்ணான ரோசம்மா என்ற கூத்துக்கலைஞரை ஹீரோயினாக்கி உயர்சாதிப் பெண்ணாக நடிக்க வைத்தார். படம் ரிலீஸ் ஆனபோது உயர் சாதிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, படத்தை ஓடவிடாமல் செய்தனர். இதனால் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.

பொருளாதார ரீதியிலும் நலிவுற்ற டேனியல், அனைத்து சொத்துகளும் பறிபோன நிலையில், பாளையங்கோட்டைக்கு திரும்பி, வறுமை காரணமாகவும், உடல் நலிவடைந்ததாலும் 1975ல் காலமானார்.மலையாளப் படவுலகின் தந்தை என்ற சிறப்புக்குரிய ஜெ.சி.டேனியல், ஒரு தமிழர் என்ற காரணத்தினாலும், அவர் இயக்கிய விகதகுமாரன் படத்தின் பிரதி கிடைக்காததாலும், கேரள அரசு அவருக்கான அங்கீகாரத்தை தர மறுத்தது. பிறகு ஒரு பத்திரிகையாளரின் விடாமுயற்சியால், சாதனையாளர்களில் ஒருவராக கண்டறியப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் செல்லுலாய்ட் என்ற பெயரில் ரிலீசாகி விருதுகளைப் பெற்றது. இந்தப் படம், இப்போது தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் வாழ்ந்திருக்கிறார். 

படத்தை வெளியிடும் உற்சாகம், உயர்சாதிக்காரர்களின் கலவரத்தால் படம் ஓடாதபோது வெளிப்படும் சோகம், எல்லாம் இழந்த நிலையில்  நோயாளியாக தன் வாழ்க்கையை பத்திரிகையாளரிடம் சொல்லும் தருணம் என, ஆழமாகப் பதிகின்ற காட்சிகள் பல. அவை எல்லாமே பிருத்விராஜின் நடிப்பில், கண்முன் நடக்கும் சம்பவங்களாக விரிகின்றன.டேனியல் மனைவி ஜானெட் வேடத்தில் மம்தா மோகன்தாஸ், கச்சிதம். கணவரின் சினிமா கனவுகளை தன் தோளில் சுமக்கிறார். ஹீரோயின் ரோசம்மாவிடம் காட்டும் அன்பு, கருணை, பரிவு, பாசம் எல்லாமே யதார்த்தம். ரோசம்மாவாக வரும் சாந்தினி, அட்டகாசமான தேர்வு. அகன்ற விழிகளில் நவரச நடிப்பை வெளிப்படுத்துகிறார். 

சினிமாவில் உயர்சாதிப் பெண்ணாக எப்படி நடிக்கப் போகிறோம் என்று தவிப்பதும், ஏங்குவதும் பரிதாபப்பட வைக்கிறது. சினிமாவிலாவது சாதி, மதம் பார்க்காமல் இருப்போமே என்று டேனியல் சொல்வது, நெற்றிப்பொட்டில் அறைகிறது.நடராஜ முதலியாராக தலைவாசல் விஜய், பி.யு.சின்னப்பாவாக மதன்பாப், டேனியலின் சாதனையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்திரிகையாளராக சீனிவாசன், நடிப்பில் பிரமாதப்படுத்துகின்றனர்.வேணுவின் ஒளிப்பதிவும், ஜெயச்சந்திரனின் இசையும், இந்த சாதனை சரித்திரம் தடம்புரளாமல் ஓட உதவியிருக்கின்றன.சாதனையாளர்களை உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள் என்ற அற்புதமான மெசேஜை சொன்னதற்காக, இயக்குனர் கமலுக்கு ஒரு பூங்கொத்து.

சுந்தரம் சாவு வீட்டில் பறையடிப்பவன். ராக்கம்மா ஒப்பாரி பாடுகிறவள். சாவு வீடுகளில் தொழில் நிமித்தமாகச் சந்தித்துக் கொள்ளும் இவர்களுக்குள் மலர்கிறது காதல். மற்றவர்களுக்குத் துயரத்தை கொடுக்கும் இறுதி சடங்குகள் இவர்களுக்கு மங்கல நிகழ்ச்சியாகிறது. காதல் கனிந்து வரும் நேரத்தில், அந்த காதலுக்கு ஊர் பெரிய வீட்டு பெண்ணின் ஈகோ ஒன்று வில்லனாக வருகிறது. இறுதியில் காதல் எப்படி வெல்கிறது என்பது மீதிக் கதை.கதையும், காதலும் பழசுதான் என்றாலும் சொல்லியிருக்கும் விதமும், சொல்லப்பட்டிருக்கும் களமும் புதிதாக இருக்கிறது. 

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் இதில் கதையின் நாயகனாக புரமோஷனாகியிருக்கிறார். பறையடித்து பிழைக்கும் எளிய மனிதனை அப்படியே பிரதிபலிக்கிறார். அழுக்கு லுங்கி, சட்டை, அரிதாரம் பூசாத முகம் இவற்றின் மூலமே காதலை சுலபமாக கொண்டு வருகிறார். காதலித்தவளை யுகேந்திரனுக்கு பேசி முடித்த பிறகு அதைத் தட்டிக் கேட்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தவித்து தன் பறையொலி மூலமே அதை வெளிப்படுத்துவது அற்புதமான நடிப்பு.

 ராக்கம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா நம்பிக்கையான வரவு. அவருக்கு பெரிதாக வேலை இல்லை. புருவம் சுருக்கி, கண்களை இறுக்கி அவர் காதலை வெளிப்படுத்துவது அழகு. பேச்சில் குரூரத்தையும், வார்த்தையில் வஞ்சத்தையும் வைத்திருக்கும் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி கிராமத்து சொர்ணாக்காவாக பின்னியெடுக்கிறார். பொசுக்கென்ற அவர் மரணம் கூட தியேட்டரில் சிரிப்பை கொண்டு வருகிறதென்றால் அவர் நடிப்பு அப்படி. வில்லன்போல வந்து கடைசியில் ஒரு மனிதனாக நடந்து கொள்கிற யுகேந்திரன் கேரக்டர் யதார்த்தம்

.சீரியசான விஷங்களையும்கூட காமெடியாகச் சொல்லியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை குறைக்கிறது. தன்னை உயர்ஜாதியாக கருதிக் கொள்கிற வில்லி, தன் மகன் தாழ்ந்த ஜாதி பெண்ணை காதலிப்பதை இவ்வளவு மென்மையாகவா கையாள்வார்? சுந்தரம் மீது வில்லி அத்தனை கோபம் கொள்வதற்கு போதிய காரணம் இல்லை. 

அதேபோல சுந்தரம் மீது ராக்கம்மா காதல் கொள்ள வைக்கிற அளவிற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் மண்ணின் மணம். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு நேர்மையாக அமைந்திருக்கிறது.

டிராக்டர் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் கார்த்தி, பிரேம்ஜி. ஆரணியில் அதன் கிளை திறப்பு விழாவுக்கு செல்லும் இருவரும் விழா முடிந்ததும், குடித்துக் கொண்டே திரும்புகிறார்கள்.  வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒரு கடையில் நிறுத்துகிறார்கள் காரை. அதே கடைக்கு விலை உயர்ந்த காரில் வரும் மாண்டி தாக்கர், அவர்களை தனக்கு கம்பெனி கொடுக்க கேட்கிறாள். ஜொள்ளு பார்ட்டிகளான இருவரும் அவள் பின்னால் சென்று ஆடிப்பாடி குடித்து தீர்க்கிறார்கள். விடிந்து பார்த்தால், கூத்தடித்த அறையில் துப்பாக்கி, ரத்தக் கறை. போதையில் என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. போலீஸ் வரவும் ஓடுகிறார்கள்.

 அவர்களின் கார் டிக்கியில் தொழில் அதிபர் நாசரின் பிணம். பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொலை பழியில் சிக்கும் இவர்கள், எப்படி அதிலிருந்து மீள்கிறார்கள். இந்த சதிவலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.பெண்களை கண்டவுடன் கரெக்ட் பண்ணும் கேரக்டரை ஹீரோ இமேஜ் பாதிக்காமல் நாசுக்காகச் செய்கிறார் கார்த்தி. பெண்கள் விஷயத்தில் பிரேம்ஜியை உசுப்பேற்றியே ரணகளமாக்குற கார்த்தியின் அலப்பறைகளும், பிரேம்ஜியின் புலம்பல்களும் ‘ஏ’ கிளாஸ் காமெடி.

கார்த்தியின் அந்த சிரிப்பும், தலைசாய்த்த நடையுமான டிரேட் மார்க் மேனரிசம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறது.படம் முழுக்க நிறைந்திருக்கிறார் பிரேம்ஜி. படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். குளோஸ்&அப்பில் பேசி பேசி வெறுப்பேற்றுகிறார். கார்த்திக்குக்கு பிரச்னை வரும்போது களத்தில் குதிக்கையில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். ஹன்சிகா வழக்கம்போல அழகு பொம்மை. பிற்பகுதியில் கதை ஆக்ஷனுக்குள் சென்று விடுவதால் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து போகிறார்.ஒரு காதல். அதனால் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையேயான மோதல். 

அதற்குள் அப்பாவிகளான கார்த்தியையும், பிரேம்ஜியையும் மாட்ட வைத்தல், பூனையாக இருந்தவர்கள் புலியாக மாறி எதிரிகளை பந்தாடுதல் என்ற பரபர திரைக்கதையில் யூகிக்க முடியாத கிளைமாக்சால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் இயக்குனர். நாசர் மாதிரி மாஸ்க் போட்டு பிரேம்ஜி நடிப்பதெல்லாம் ஓல்டு ஐடியாவாக இருந்தாலும் நாசரின் நடிப்பால் சுவாரஸ்யமாகிறது. அந்த கடைசி நேர ட்விட்ஸ் கணிக்க முடியாதது. ஆனால், ‘அட இதுக்காகவா இவ்ளோ சுத்தி வளைச்சு கதை சொன்னாங்க என்று கேட்கத் தோன்றுகிறது.

போலீசை குடைந்தெடுக்கும் அந்த சிசிடி கேமரா காட்சி, சும்மா போதையில் பண்ணிய அலப்பறை என்று அவிழ்ப்பது ஏமாற்றம். அதைப் பதிவு செய்த கேமரா, கொலையாளியை பதிவு செய்யாமல் போனது ஏன்? திடீரென்று வரும் உமா ரியாஸ்கான் கேரக்டர், ஒட்டவே இல்லை. பிரச்னைகளுக்கு காரணமான மாண்டி தாக்கர், பாலியல் தொழிலாளியா? நாசரின் ஆசை நாயகியா? என்பதில் குழப்பம். யுவனின் 100&வது படம் என்கிறார்கள். அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரியாணிக்கு கலர் கொடுத்திருக்கிறது.